பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனது நிறுவனம் தயாரித்த விநாயகர் சிலைகளை போலீசார் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர். அந்த தடை உத்தரவை ரத்து செய்து விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்க தடை விதிக்க முடியாது என்று நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த, ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில், பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அதை ஏன் பின்பற்றுவதில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சுப்பொருட்கள் கலந்து சிலைகளை செய்யக்கூடாது என்ற உத்தரவு இருக்கும் போது இது குறித்த விழிப்புணர்வு ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் புற்றுநோய் அதிக அளவில் பரவுகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை எல்லாமே விஷம் தான் என்று கூறினர். அம்மோனியா, மெர்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிசும் நச்சுப் பொருள்தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.