மாட்டுக் கொட்டகையாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்


மாட்டுக் கொட்டகையாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்
x
தினத்தந்தி 15 Jun 2023 2:30 AM IST (Updated: 15 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாட்டுக் கொட்டகையாக பந்தலூர் பஸ் நிலையம் மாறி உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்

மாட்டுக் கொட்டகையாக பந்தலூர் பஸ் நிலையம் மாறி உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பஸ் நிலையம்

பந்தலூரில் கூடலூர், கோழிக்கோடு, சுல்த்தான்பத்தேரி செல்லும் சாலையில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து ஊட்டி, கூடலூர், கோவை, சுல்த்தான்பத்தேரி, கோழிக்கோடு மற்றும் பந்தலூர் சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து வரும் பஸ்கள் பந்தலூர் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. இங்கிருந்து கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர்.

இதற்கிடையே இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் பசு மாடுகள் படுத்து ஓய்வெடுத்து வருகின்றன. அவை கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே படுத்து கிடப்பதால், கால்நடைகளின் கொட்டகையாக மாறி உள்ளது. இதனால் அதன் கழிவுகள் பஸ் நிலையத்தில் கிடக்கிறது. கால்நடைகள் நடமாட்டத்தால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பஸ்சுக்காக காத்திருக்க சிரமம் அடைகின்றனர்.

சுகாதார சீர்கேடு

இதேபோல் தினமும் கால்நடைகள் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிவதால், அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் முகம் சுளிக்கின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தூய்மை பணியாளர்கள் பசுமாடுகளின் கழிவுகளை சுத்தப்படுத்த சிரமப்படுகின்றனர். இந்த நிலையை போக்க கால்நடைகள் பஸ் நிலையத்திற்குள் புகுவதை தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பந்தலூரில் கால்நடைகள் சாலைகளில் உலா வருகின்றன. அவ்வப்போது சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவர்களை துரத்தி வருகிறது. கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் ஓய்வெடுக்கின்றன. இதனால் காலையில் சென்று பார்த்தால், அங்கு கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே, பஸ் நிலையத்திற்குள் கால்நடைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story