வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
ஸ்ரீரங்கம்:
ஏ.டி.எம். மையம்
திருச்சி மாம்பழச்சாலையில் இருந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் செல்லும் சாலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேர காவலாளி இல்லை. அதே நேரத்தில் அந்த ஏ.டி.எம். அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதன் இணைப்பு மும்பையில் உள்ள தலைமையகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமரா இணைப்பு நேற்று அதிகாலை திடீரென துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொள்ளை முயற்சி
அவர்கள், இதுபற்றி சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தை பராமரிக்கும் வங்கியின் கிளை மேலாளருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர் உடனே ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று இதுபற்றி புகார் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதாலட்சுமி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க மர்ம ஆசாமி உளியை பயன்படுத்தியுள்ளார். அந்த உளிைய அங்கேயே அவர் விட்டுச்சென்றிருந்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமரா இணைப்புகள் துண்டிப்பு
அப்போது, அந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று அதிகாலை 2.40 மணிக்கு குரங்கு குல்லா, முககவசம், ஜெர்கின், கையுறை அணிந்த ஒரு மா்ம ஆசாமி வந்ததும், அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டிக்கும் காட்சிகளும், ஏ.டி.எம். எந்திரத்தை உளியால் உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
தற்போது, மார்கழி மாதம் அதிகாலை கடும் குளிர் நிலவுவதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதை நன்கு நோட்டமிட்ட அந்த மர்ம ஆசாமி, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. 40 நிமிடங்களாக அவர் பலமுறை முயற்சித்தும், அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் அந்த எந்திரத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது, என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.