கால்வாயில் வங்கி ஊழியர் பிணம்


கால்வாயில் வங்கி ஊழியர் பிணம்
x

தம்மத்துக்கோணம் அருகே கால்வாயில் தனியார் வங்கி ஊழியர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

தம்மத்துக்கோணம் அருகே கால்வாயில் தனியார் வங்கி ஊழியர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கால்வாயில் பிணம்

ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம் தம்மத்துக்கோணம் டாஸ்மாக் கடை அருகே கால்வாயில் நேற்று அதிகாலையில் ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதை கண்ட அந்த பகுதியினர் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி இறந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் நாகர்கோவில் அருகே உள்ள புன்னைநகர் முன்சிபல் காலனியை சேர்ந்த தினகர் என்கிற தினகரன் (வயது 54) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல தகவல்கள் தெரிய வந்தது.

பிணமாக கிடந்த தினகருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

முன்னாள் வங்கி ஊழியர்

தினகர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்போது பங்குசந்தைகளில் முதலீடு செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஒருவரை மது குடிக்க அழைத்துள்ளார். அவர் மறுத்ததால் தினகர் தனது இருசக்கர வாகனத்தில் தனியாக தம்மத்துக்கோணம் பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கிய பின்னர் கடையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மரக்கடை பாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் பக்க சுவரில் அமர்ந்து மது குடித்துள்ளார்.

இந்தநிலையில் அவர் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

முகத்தில் காயங்கள்

பிணத்தின் முகத்தில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த கால்வாயில் சுமார் 2 அடி அளவே தண்ணீர் உள்ளது. அந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் குறைந்து இருட்டாக காணப்படும். எனவே மது பிரியர்கள், கஞ்சா கும்பல்கள் அதிக அளவில் நடமாடுவதாக கூறப்படுகிறது. இதனால் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப் பட்டாரா? அல்லது போதையில் தவறி கால்வாயில் விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story