ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றின் சுழலில் சிக்கி பெங்களூரு வங்கி ஊழியர் சாவு


ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றின் சுழலில் சிக்கி பெங்களூரு வங்கி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 7 Jun 2023 1:00 AM IST (Updated: 7 Jun 2023 6:24 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி பெங்களூருவை சேர்ந்த வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

வங்கி ஊழியர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜீவன் பீமா நகரை சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் கிருஷ்ணா (வயது 34). இவர் அங்குள்ள வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.

ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை நண்பர்கள் சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் நாடார் கொட்டாய் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது கிருஷ்ணா ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றபோது ஆற்றின் சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

உடல் கரை ஒதுங்கியது

இது தொடர்பாக அவருடைய நண்பர்கள் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கிருஷ்ணா தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து கரையோரம் காத்து இருந்தனர்.இந்த நிலையில் நேற்று ஊட்டமலை காவிரி ஆற்றில் கிருஷ்ணாவின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணாவின் உடலை மீட்டனர். அப்போது உடலை பார்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி துடித்தனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவிரி ஆற்றில் சுழலில் சிக்கிய கிருஷ்ணா தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story