நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும்-வங்கி ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என வங்கி ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 3-வது பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் மாவட்ட தலைவர் ஜீவா மதிமார் செலசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்படி தலைவராக ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பிரேம் ஆனந்த், செயலாளர் சக்திவேல், பொருளாளர் வினோத், கவுரத்தலைவர் மதிமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து கூட்டத்தில் வங்கி சார்ந்த கருத்துக்களை தெரிவிக்க வங்கி தொழிலாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலத்தை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது, நகை மதிப்பீட்டாளர்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து பணியை சீர்படுத்த, பணி பாதுகாப்பளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபார தொடர்பு ஒப்பந்த பணியாளர்களின் பணியை உறுதி செய்ய வேண்டும். பகுதிநேர பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், துணை ஊழியர்கள், பியூன் ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப ஐ.பி.ஏ.-வை நிர்பந்தம் செய்ய போராட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.