மக்களைத்தேடி வந்து வங்கிகள் கடன் கொடுத்து வருகிறது


மக்களைத்தேடி வந்து வங்கிகள் கடன் கொடுத்து வருகிறது
x
தினத்தந்தி 4 Oct 2023 3:00 AM IST (Updated: 4 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளை தேடிச்சென்ற நிலைமாறி, மக்களை தேடிச்சென்று வங்கிகள் கடன் கொடுத்து வருகிறது என்று கோவையில் நடந்த விழாவில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

கோயம்புத்தூர்

வங்கிகளை தேடிச்சென்ற நிலைமாறி, மக்களை தேடிச்சென்று வங்கிகள் கடன் கொடுத்து வருகிறது என்று கோவையில் நடந்த விழாவில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

கடன் வழங்கும் விழா

கோவை கொடிசியா வளாக அரங்கில் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் தொழில்முனைவோர், விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், மாணவ-மாணவிகள் உள்பட 90 ஆயிரம் பேருக்கு மாபெரும் கடனுதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.3,749 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-

அனைத்து மக்களுக்கும் பலன்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்களை வங்கிகள், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் சொல்லி இருக்கின்றார். முன்பு 100 பேருக்கு திட்டமிட்டால் 20 பேருக்கு மட்டுமே திட்டங்கள் சேரும்நிலை இருந்தது. ஆனால் தற்போது முழுமையாக 100 பேருக்கும் அல்லது 90 பேருக்காவது திட்டத்தின் பயன்கள் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களையும் தேர்வு செய்து தொழில் கடன் உதவி வழங்கப்பட்டதன் மூலம் அந்த மாவட்டங்களில் நல்ல வளர்ச்சியை காண முடிகிறது. மாவட்ட அளவில் நிதி உதவி திட்டங்களை கொண்டு செல்வதை, தற்போது வட்டார அளவில் விரிவுபடுத்தி வருகின்றோம்.

வரிகள் வசூலிக்கப்படும்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறது. ஆனால் செஸ் என்று வசூலிக்கும்போது, அது மாநில அரசுக்கு வராது என்று குற்றம்சாட்டி வருகின்றனர், அது தவறானது.

இந்த விழாவில் நபார்டு வங்கி மூலம் செஸ் வருவாய் பல்வேறு விவசாய நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுவதையும், அதற்கான உதவித்தொகை வழங்கப்பட்டு இருப்பதையும் பார்க்கலாம்.

விழாவில் 23 ஆயிரத்து 800 பேருக்கு தனிநபர் கடனாக ரூ.1,828 கோடியும், தொழில் முனைவோருக்கு முத்ரா வங்கி மூலம் ரூ.2,904 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி வங்கிகள்

வங்கியை தேடி மக்கள் அலைகின்ற காலம் மாறி, மக்களை தேடி வந்து வங்கிகள் கடன் கொடுக்கின்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க சிட்பி வங்கியின் 2-வது கிளை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், நிதித்துறை செயலாளர் விவேக் ஜோஷி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கொடிசியாவில் ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தொழில்நுட்ப திட்டங்களை வழங்கும் மையத்தையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

தூய்மை பணி

முன்னதாக ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு பாரதி காலனியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சாலையில் தூய்மை பணி மேற்கொண்டார். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக வங்கிகள் வழங்கிய ரூ.15 லட்சத்துக்கான காசோலைகளையும் அதிகாரிகளிடம் வழங்கினார்.

தொடர்ந்து பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, 2047-ல் இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும். இதில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.


Next Story