கடலுக்கு செல்ல இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி
மீன்பிடி தடைக்காலம் முடிந்து 14-ந் தேதி கடலுக்குள் செல்ல இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடிக்க தடை
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதேபோல் தமிழக முழுவதும் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர்.
மீனவர்கள் மகிழ்ச்சி
இந்த தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு மீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி படகில் உள்ள பழுதுகளை நீக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், மீன் பிடிக்க தேவையான வலைகள் மற்றும் இதர சாதனங்களை புதுப்பித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தடைக்காலம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ளதால் பராமரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இதனால் மீன் பிடி துறைமுகங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. புதுப்பிக்கப்பட்ட படகுகளை கடலுக்குள் இறக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.