நில அளவையரை வழிமறித்து சரமாரி தாக்குதல்
ராமநத்தம் அருகே நிலத்தை அளவீடு செய்து தராததால் ஆத்திரம் அடைந்த விவசாயி, நிலஅளவையரை வழிமறித்து சரமாரியாக தாக்கினார்.
ராமநத்தம்,
இடப்பிரச்சினை
ராமநத்தம் அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால், கிருஷ்ணமூர்த்தி. இவர்களுக்கு இட பிரச்சினை இருந்ததை அடுத்து அவர்கள் நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி திட்டக்குடி தாலுகா அலுவகத்தில் உள்ள நிலஅளவை பிரிவில் மனு கொடுத்தனர்.
இதைடுத்து நில அளவையர் வெள்ளியங்கிரி(42) அதர்நத்தம் கிராமத்துக்கு சென்று கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பிரச்சினைக்குரிய இடத்தை அளவீடு செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
சரமாரி தாக்குதல்
மேற்கு தெரு வழியாக வந்தபோது அதே கிராமத்தை சோ்ந்த விவசாயி ஞானவேல்(50) என்பவர் திடீரென வெள்ளியங்கிரியை வழிமறித்து, தனது நிலத்தை அளவீடு செய்து தர மனு கொடுத்து பல நாட்களாகியும் ஏன் நிலத்தை அளவீடு செய்து தரவில்லை என்று கேட்டு அவரை சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த வெள்ளியங்கிரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயி கைது
இது குறித்து வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவேலை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.