தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய வேண்டும்
தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய வேண்டும் என விவசாயிகளிடம் அதிகாரி வலியுறுத்தினார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பகுதியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், தார்ப்பாய், பண்ணை சாகுபடி தொகுப்புகள் வழங்கப்படுவதோடு, தரிசு நிலங்களை சாகுபடி செய்யும் நிலங்களாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் தரிசு நிலத்தொகுப்பினை வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்கிருந்த விவசாயிகளிடம், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. எனவே தரிசு நிலங்களை சீரமைத்து அங்கு விரைவில் விவசாயம் செய்ய வேண்டும். இதன் மூலம் பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும் என்றார்.
ராஜஸ்தான் மாநில கம்பு ரகம்
தொடர்ந்து சித்தலூர் கிராமத்தில் ராஜஸ்தான் மாநில கம்பு ரகமான சுல்கானியா கம்பு சாகுபடி செய்யப்பட்ட வயலில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த விவசாயியிடம், வெளிமாநில கம்பு ரகத்திற்கும், நமது மாநில கம்பு ரகத்திற்கும் உள்ள வேறுபாடுகள், பயன்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
இதையடுத்து வடதொரசலூர் கிராமத்தில் கம்பு விதை பண்ணை வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம், வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா, உதவி விதை அலுவலர் மொட்டையாப்பிள்ளை, உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ், அட்மா தொழிநுட்ப பணியாளர்கள் சூரியா, கலைவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.