ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் அமைப்பு


ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் அமைப்பு
x
தினத்தந்தி 18 Jun 2023 2:30 AM IST (Updated: 18 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-கோழிக்கோடு சாலையில் விபத்துகளை தடுக்க ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-கோழிக்கோடு சாலையில் விபத்துகளை தடுக்க ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

தொடர் விபத்துகள்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநில மக்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாக உள்ளது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் கோழிப்பாலம் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

அப்பகுதியில் உள்ள வளைவான இடத்தில் சரக்கு லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. அகலம் குறைந்த பகுதி என்பதாலும், அதிக டயர்கள் கொண்ட சரக்கு லாரிகள் இயக்குவதாலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விபத்துகள் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தடுப்புச்சுவர் கட்டும் பணி

இதைத் தொடர்ந்து கூடலூர்-கோழிக்கோடு சாலை கோழிப்பாலம் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் விபத்துகள் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு, தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வெளிமாநில வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் சாலையில் பல இடங்களில் மழைக்காலத்தில் மண்சரிவு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, தடுப்புச்சுவர் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story