கல்லூரி மாணவர் பலி எதிரொலி:புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க தடை
புளியஞ்சோலை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அதன் எதிரொலியாக ஆற்றில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சேந்தமங்கலம்
கல்லூரி மாணவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையிலும் அங்குள்ள புகழ் வாய்ந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. அந்த நீர்வீழ்ச்சிக்கு முன்னதாக காணப்படும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஊற்றால் தண்ணீர் அப்பகுதியில் விழுவதாக கூறப்படுகிறது. அந்த நீர் திருச்சி மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடிவார பகுதியான புளியஞ்சோலை ஆற்றில் வந்து கலந்து விடுகிறது.
இதனால் அந்த ஆற்றில் குளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் கடந்த 22-ந் தேதி திருச்சி மாவட்டம் பாபுராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாலிக் (வயது 19). கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர்களுடன் புளியஞ்சோலை ஆற்றில் ஆழமான பகுதியாக கருதப்படும் நாட்டாமடுவில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி மாலிக் பரிதாபமாக இறந்தார்.
ஆற்றில் குளிக்க தடை
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் வனத்துறை அலுவலர்களுடன் அந்த ஆற்றுப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதியாக கருதப்படும் நாட்டாமடுவு பகுதியில் வனத்துறையினர் தங்கும் கூடாரம் ஒன்று அமைத்து, வன அலுவலர்கள் அப்பகுதியில் இருந்து கண்காணிக்கவும், குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதையொட்டி அதற்கான பணிகள் நடைபெற இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை மூலம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.