விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம்
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலையில் 2 கரடிகள் நடமாடின. அங்குள்ள விநாயகர் காலனி குருசடியில் இருந்து மெயின் ரோடு வழியாக சென்ற கரடிகள், பிள்ளையார் கோவிலில் இருந்து தென்பக்கமாக சாலையை கடந்து சென்றதை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''அகஸ்தியர்பட்டியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு வந்துள்ள கரடிகள் இரவு நேரங்களில் இங்குள்ள நொச்சிகுளத்தில் மீன்களை பிடித்து உண்ணுகின்றன.
இந்த கரடிகள் பகல் நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்கு செல்லுமா? அல்லது குடியிருப்பு பகுதியில் மறைவான புதர் இடங்களில் பதுங்கி இருக்குமா? என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இங்குள்ள சிவசக்திநகர், உல்லாசநகர், மந்தைகாலனி, கல்சுண்டு காலனி பகுதி மக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். எனவே கரடிகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்'' என்று தெரிவித்தனர். அகஸ்தியர்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்து மாணவர்கள் உள்பட 14 காயமடைந்தனர். இந்த நிலையில் அங்கு கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.