மழை பெய்யாததால் 135 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

மழை பெய்யாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக குறைந்தது
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 16-ந்தேதி அணையின் நீர்மட்டம் 135.40 அடியை எட்டியது. இதற்கிடையே மத்திய நீர் வள ஆணையம் பரிந்துரையின்படி ரூல் கர்வ் முறைப்படி அணையில் 136.6 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது.
இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரள மாநில பகுதியான வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து ஆகிய பகுதி மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் மழை பெய்யவில்லை.
இதையடுத்து அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 136.6 அடிக்கு மேல் உயர வாய்ப்பு இல்லை. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,543 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,867 கன அடியாகவும் உள்ளது.






