நோய் தாக்குதலால் வீணாகும் பீர்க்கங்காய் கொடிகள்
நெகமம் பகுதியில் நோய் தாக்குதலால் பீர்க்கங்காய் கொடிகள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெகமம்
நெகமம் பகுதியில் நோய் தாக்குதலால் பீர்க்கங்காய் கொடிகள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பீர்க்கங்காய் சாகுபடி
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குறுகிய கால பயிர் என்பதால் பீர்க்கங்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது நடவு செய்த 30 நாட்களில் காய்ப்பு திறனுக்கு வருகிறது. தொடர்ந்து அறுவடைக்கு தயாராகி விடுவதால் வியாபாரிகளும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று ஒப்பந்த அடிப்படையில் பீர்க்கங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். இந்த நிலையில் தற்போது விளைச்சல் அதிகரித்தும், வெள்ளை நோய் தாக்குதல் ஏராளமாக உள்ளது. இதனால் அவை வீணாகி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பீர்க்கங்காய்களை பறிக்காமல் அப்படியே கொடியில் விட்டுள்ளனர்.
நோய் தாக்குதல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கொடி வகை பயிரான பீர்க்கங்காய் வேகமாக வளரக்கூடியது. மேலும் 90 நாட்கள் வரை அதிக மகசூல் தரக்கூடியது ஆகும். ஒருநாள் விட்டு ஒரு நாள் பறித்தால் ஒரு காய் அரை கிலோ எடை வரையிலும், 2 அல்லது 3 நாட்கள் கழித்து பறித்தால் ஒரு காய் ஒரு கிலோ எடை வரையிலும் விளைச்சல் இருக்கும். இதனால் பந்தல் அமைத்து, பீர்க்கங்காய் சாகுபடி பரப்பை அதிகரிகரித்தோம். ஆனால் திடீரென வெள்ளை நோய் தாக்குதல் அதிகரித்து விட்டது. இதனால் பீர்க்கங்காய்களை பறிக்கவில்லை.
உரிய இழப்பீடு
தற்போது ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனை ஆகிறது. ஆனால் நோய் தாக்கியுள்ளதால் குறைந்த விலைக்கே செல்லும். இதனால் ஆட்கள் கூலி, உரம் விலை உயர்வு உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்ய முடியவில்ைல. இதனால் விளை நிலங்களில் விளைந்துள்ள பீர்க்கங்காய்களை பறிக்காமல் உள்ளோம். இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறோம். மேலும் கொடிகளை வேருடன் பிடுங்கி எறிந்து விடுகிறோம். எனவே உரிய இழப்பீடு வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.