ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிக்க முயற்சி
அந்தியூர் தாலுகா பி.மேட்டுப்பாளையம் அருகே பூமாண்டக்கவுண்டனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 37). இவர் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் வசித்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்தநிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஜெயக்குமார் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நுழைவு வாயில் பகுதியில் வந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை வெளியே எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர்.
வழக்கு
இதுகுறித்து ஜெயக்குமார் கூறியதாவது:-
புதுக்காலனியில் 24 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு பொதுக்கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிலர் கழிப்பிடம் அமைப்பதற்காக தேர்வு செய்துள்ள இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுக்கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீக்குளிக்க முயன்ற ஜெயக்குமார் மீது ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.