அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாய் விரித்து படுத்து டிரைவர் போராட்டம்
தேனியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாய் விரித்து டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்
தேனி ராஜாக்களம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 60). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இன்று இவர், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். பணிமனை முன்பு தரையில் பாய் விரித்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "நான் அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 38 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 2020-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றேன். எனக்கான பணப் பலன்களை வழங்காமல் தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர். ஏற்கனவே நான் போராட்டம் நடத்தியுள்ளேன். ஆனாலும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை" என்றார்.
இதையடுத்து அவரிடம் போக்குவரத்து கழக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.