தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.
வடமாநிலக்காரர்கள்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும்.
இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது.
அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.
திணித்துக்கொள்கிறோம்
இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம். இதை ஆதங்கப்பட்டோ பொறாமைப்பட்டோ கூறவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.
நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? பசி வயிற்றில் இருந்தால்தானே அவர்களுக்கு வேலையில் பக்திவரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.
அர்ப்பணிப்பு இல்லை
எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது. 'இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!' என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது.
அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தியேட்டர்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் தொழிலாளர்களாகவும், கரும்பு வெட்டும் பணிக்கான கூலித்தொழிலாளர்களாகவும் அவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அத்துடன் மலைத் தோட்டங்களில் தங்கி பலர் வேலை பார்க்கின்றனர். மேலும் அனைத்து விதமான வியாபாரங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
வெற்றிவேல் (விவசாயி, அகமலை) :- விவசாய பணிக்கு கூலியாட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. அதிலும் மலைத் தோட்டங்களில் தங்கி வேலைபார்க்க ஆட்கள் வருவது இல்லை. அவ்வாறு வந்தாலும் அதிக கூலி கேட்கிறார்கள். மது அருந்திவிட்டு சரியாக வேலை பார்ப்பதும் இல்லை. இதனால், எனது தோட்டத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளேன். நான் மட்டுமன்றி அகமலை சுற்றுவட்டாரத்தில் தோட்டங்கள் வைத்துள்ள பலரும் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு வைத்துள்ளோம். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுத்த போதிலும், அது இங்குள்ள தொழிலாளர்கள் கேட்கும் கூலியை விட குறைவாகவே உள்ளது. இது விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ளது" என்றார்.
வாக்கு வங்கி
அறிவழகன் (நவீன சலவைக்கூட உரிமையாளர், கூடலூர்) :- தற்போது சலவைத் தொழில் செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. நவீன எந்திரங்கள் மூலம் சலவை செய்கிறோம். சலவைத் தொழில் என்பதால் உள்ளூரில் இருந்து ஆட்கள் வேலைக்கு வருவது இல்லை. பல லட்சம் ரூபாய் செலவு செய்து எந்திரங்கள் வாங்கி முதலீடு செய்தால் தொழிலை நடத்த முடியாத நிலைமை ஏற்படும். உள்ளூர் சம்பளத்தை விடவும் வடமாநில தொழிலாளர்களுக்கான சம்பளம் குறைவு தான். இது தொழில் நடத்துபவர்களுக்கும் கட்டுப்படியாகிறது. அவர்கள் அடிக்கடி விடுமுறையும் எடுப்பது இல்லை. இதனால், தொழில் பாதிப்பு இன்றி நடக்கிறது.
தம்பிஆனந்தன் (சமூக ஆர்வலர், தேனி) :- தமிழகத்தில் கூலித்தொழிலாளர்கள் பலரும் உழைக்கும் பணத்தை மதுகுடித்து அழிப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு ஏற்ப பல இடங்களில் கூலித்தொழிலாளர்களை மையப்படுத்தி மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மது பழக்கத்துக்கு அடிமையான பலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டும், உடல் பலகீனமாகியும் உள்ளனர். இதனால், வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கும் ஆபத்தானது. இன்றைக்கு தமிழகத்தில் வடமாநில வியாபாரிகள், தொழிலாளர்கள் பலரும் வாக்குரிமை பெற்றுள்ளனர். பல மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களை தேர்வு செய்யும் அளவிலான வாக்கு பலத்துடன் உள்ளனர். இதே நிலைமை நீடித்தால் தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் வாக்கு வங்கி பெருகி, இந்த மண்ணுக்கான அரசியலே மாறிவிட வாய்ப்புள்ளது.