தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?


வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

விருதுநகர்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.

வடமாநிலக்காரர்கள்

தென் மாவட்டங்களை சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும்.

இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது.

அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.

திணித்துக்கொள்கிறோம்

இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம். இதை ஆதங்கப்பட்டோ பொறாமைப்பட்டோ கூறவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.

நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? பசி வயிற்றில் இருந்தால்தானே அவர்களுக்கு வேலையில் பக்திவரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.

அர்ப்பணிப்பு இல்லை

எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது. 'இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!' என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது.

அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள்.

இதுபற்றி பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண்போம்.

தேவையில்லாமல் விடுமுறை

விருதுநகர் நூற்பு மில் அதிபர் ராம்தாஸ்:-

எங்கள் நூற்புமில்லில் 25 சதவீதம் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் 75 சதவீதம் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் முறையாக வேலைக்கு வரும் நிலை உள்ளது. இல்லையேல் அடிக்கடி தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுப்பதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் நூற்பு மில் வேலை தெரிந்த தொழிலாளர்கள் வேலைக்கு வந்தாலேயே இங்குள்ள அனைத்து நூற்பு மில்களுக்கும் வேலையாள் பற்றாக்குறை இருக்காது. அவர்கள் சரிவர வேலைக்கு வராத நிலையில் தான் வட மாநில தொழிலாளர்களையும் பணியமர்த்த வேண்டியுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுவதால் உள்ளூர் தொழிலாளர்கள் தேவையில்லாமல் விடுமுறை எடுப்பது தவிர்க்கப்படுகிறது. மொத்தத்தில் நிறுவனத்தில் வேலை பிரச்சினை இல்லாமல் நடக்கிறது.

என்ஜினீயர் கண்ணன்:-

கட்டிட வேலைக்கு உள்ளூர் தொழிலாளர்களை நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும் குறிப்பிட்ட சில பணிகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பாக கட்டிட பணியில் தளக்கற்கள் பதித்தல், கிரானைட் வேலைகளுக்கு வட மாநில தொழிலாளர்களின் பணியில் பிரச்சினை ஏற்படுவதில்லை. எனவே தேவைப்படும் பணிக்கு அவர்களை பணியமர்த்துவதில் தவறில்லை. அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் பணியை செய்து முடித்துச் செல்லும் நிலை உள்ளது.

சளைத்தவர்கள் அல்ல

செல்வகுமார்:-

ராஜபாளையம் பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பஞ்சு மில், கட்டிடத்தொழில், ஓட்டல், பேக்கரி, மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலை பார்க்கும் சமயத்தில் விடுமுறை எடுக்கும் பழக்கம் கிடையாது. தொடர்ந்து பணிபுரிந்து வருபவர் ஆவார். மேலும் நமது பகுதியில் உள்ள பணியாளர்களை வேலையில் சேர்த்தால் அடிக்கடி விடுமுறை எடுத்து விடுவார்கள். மற்றபடி வேலைகளில் சளைத்தவர்கள் அல்ல. இருந்தாலும் கூடுதலாக பணிகள் நடைபெற பிற தொழிலாளர்களையும் சேர்த்து வருகிறோம். மேலும் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

ஆட்டோ டிரைவர் யோவான் செல்வராஜ்:- தொழில் நகரமான சிவகாசியில் பணியாற்ற இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் வடமாநில வாலிபர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிவகாசியில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். பட்டாசு, அச்சகம், கட்டிட தொழில்களில் வெளி மாநில வாலிபர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களை பற்றிய எந்த விபரமும் இங்குள்ளவர்களிடம் இல்லை. வெளிமாநில வாலிபர்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களை பற்றிய முழு தகவல்கள் சேகரித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் வேலை

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பிரபல காண்டிராக்டர் வேல்முருகன் கூறியதாவது:-

தற்போது கட்டிடப்பணிகள் அனைத்திற்கும் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வேறு வழி இல்லாமல் ஆள் பற்றாக்குறை கட்டுமான தொழிலில் இருப்பதால் வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்துகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கட்டுமான தொழில் மட்டுமன்றி தொழிற்சாலைகள், நூற்பாலைகளிலும் கூட வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.

இதற்கு காரணம் தொழிலாளர்கள் இல்லாத நிலை தமிழகத்தில் இருப்பதே ஆகும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தால் இங்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு இருக்காது.

பீடா கடையில் வேலைபார்க்கும் வட மாநில தொழிலாளி சேத்தன் குமார்:-

எங்கள் ஊரில் அதிகமான அளவில் பீடா விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. ஆனால் குறைந்த அளவே சம்பளம் கிடைக்கும். ஆனால் இங்கு குறைந்த அளவே கடைகள் உள்ளதால் வியாபாரமும் அதிகமாக உள்ளது. அதற்கேற்ப சம்பளமும் கூடுதலாக கிடைக்கிறது. ஆதலால் என் குடும்பத்தை நடத்திட தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்தேன். இந்த தமிழ்நாடு மிகவும் பிடித்து விட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக இங்கேயே வேலை பார்க்கின்றேன்.


Next Story