பெங்களூரு விமான நிலையத்தில் பிரச்சினை: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து


பெங்களூரு விமான நிலையத்தில் பிரச்சினை: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து
x

பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற பிரச்சினை தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகா காந்தி. இவர், கடந்த ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில் மகா காந்தி வழக்கு தொடர்ந்தார். அதில், 'விஜய் சேதுபதியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். வாழ்த்துகளை ஏற்க மறுத்த அவர் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும் எனது சமூகத்தை பற்றியும் தவறாக பேசினார். ஆனால், மறுநாள் ஊடகங்களில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக தவறான தகவலை பரப்பினார். எனவே, நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

எந்திரத்தனம்

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டு, நேரில் ஆஜராக விஜய்சேதுபதிக்கு உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு எதிரான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி, 'பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து சென்னையில் வழக்கு தொடர முடியாது. அப்படி தொடரப்பட்ட வழக்கை சைதாப்பேட்டை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றதே தவறானது. இந்த வழக்கை சைதாப்பேட்டை கோர்ட்டு எந்திரத்தனமாக விசாரணைக்கு எடுத்து, உடனடியாக சம்மன் அனுப்பியுள்ளது' என்று வாதிட்டார்.

விளம்பர நோக்கம்

மேலும் அவர் தன் வாதத்தில், 'இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை மறைத்து இந்த வழக்கை மகா காந்தி தாக்கல் செய்துள்ளார். விளம்பர நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல், ரூ.3 கோடி இழப்பீடும் கேட்டுள்ளார். எனவே, சைதாப்பேட்டை கோர்ட்டில் விஜய் சேதுபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்துசெய்ய வேண்டும்' என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகா காந்தி தரப்பு வக்கீல் வாதிட்டார். இருதரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

வழக்கு ரத்து

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில், 'மகா காந்தியை தாக்கியதாக கூறி விஜய் சேதுபதி மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்கிறேன். விஜய் சேதுபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்துசெய்ய முடியாது. அந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்' என்று நீதிபதி கூறியுள்ளார்.


Next Story