கொல்லிமலை அடிவாரத்தில்பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது
சேந்தமங்கலம்
கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி, வாழவந்தி கோம்பை, நடுக் கோம்பை, பள்ளம்பாறை போன்ற பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு விவசாயம் நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது அங்கு அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசன் பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கும். அதையொட்டி வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொல்லிமலை அடிவார பகுதிக்கு வந்து பாக்கு அறுவடை செய்து செல்கின்றனர். அவ்வாறு அறுவடை செய்யும் பாக்குகளை வாழப்பாடி பகுதியில் இருந்து கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். அந்த பாக்குகளை அந்த மாநிலத்தில் பெயிண்டு தயாரிக்கவும், சில்லறை விலைக்கு பாக்காக பிரித்து விற்பனை செய்யவும் வாங்கி செல்கின்றனர். கடந்த வருடம் ஒரு மூட்டை ரூ.700 வரையில் விற்பனை ஆனதாகவும், தற்போது ரூ.350-க்கு மட்டுமே விற்பனை தொடங்கியதாகவும் வரும் வாரங்களில் விலை கூடுதலாகும் என்றும் எதிர்பார்த்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.