மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
சேலம் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரிய சீரகாபாடி ஊராட்சி, சின்ன சீரகாபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி, சுண்ட மேட்டு புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் எடப்பாடி நகராட்சியில் க.புதூர் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாகவும், சுவையாகவும் வழங்கப்படுவது குறித்தும், குறித்த நேரத்தில் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
1,418 பள்ளிகளில்...
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டமானது சேலம் மாநகராட்சியில் 86 பள்ளிகளிலும், நகராட்சி பகுதியில் 61 பள்ளிகளிலும், பேரூராட்சிகளில் 147 பள்ளிகளிலும், ஊராட்சி ஒன்றிய பகுதியில் 1,124 பள்ளிகள் என மொத்தம் 1,418 தொடக்கப் பள்ளிகளில் பயின்று வரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டச் செயல்பாடுகளை நாள்தோறும் ஆய்வு செய்திட மாவட்ட நிலையிலான 67 அலுவலர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு கூட்டங்கள்
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளில் இத்திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள மொபைல் ஆப் மூலம் நாள்தோறும் காலை உணவு தயார் செய்யத் தொடங்கும் செயல்பாட்டினை புகைப்படமாக எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினர் உணவின் தரம் குறித்து உறுதி செய்த பின்னர் மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் மேற்குறிப்பிடப்பட்ட மாவட்ட நிலையிலான அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர் ஆய்வுகள்
மேலும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.