பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்-இழப்பீடு குறைவாக வழங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு


பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே  நான்கு வழிச்சாலை பணிக்காக தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்-இழப்பீடு குறைவாக வழங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இழப்பீடு குறைவாக வழங்கி உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இழப்பீடு குறைவாக வழங்கி உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

நான்கு வழிச்சாலை

பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் வரை விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கு மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி-மடத்துக்குளம், மடத்துக்குளம்-ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் மற்றும் கமலாபுரம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் சாலை, மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தில் சாலை பணிக்காக தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இழப்பீட்டு தொகை குறைவாக வழங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இழப்பீட்டு தொகை குறைவு

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை பணிக்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை உள்ளிட்ட விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. முதலில் அதிகாரிகள் தரப்பில் நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.40 லட்சமும், ஒரு தென்னை மரத்துக்கு ரூ.68 ஆயிரமும், கிணறுக்கு ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது ஏக்கருக்கு ரூ.24 லட்சமும், ஒரு தென்னை மரத்துக்கு ரூ.58 ஆயிரத்து 500, கிணறுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் தான் கொடுத்து உள்ளனர். இழப்பீட்டு தொகை குறைவாக வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் வங்கி கணக்குக்கு பணம் வந்து விடும் தேவைப்பட்டால் எடுத்து கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-கமலாபுரம் இடையே 320 ஹெக்டேரும், ஒட்டன்சத்திரம்-மடத்துக் குளம் இடையே 287 ஹெக்டேரும், மடத்துக்குளம்-பொள்ளாச்சி இடையே 323 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை பொள்ளாச்சி-மடத்துக்குளம் இடையே 57 சதவீத சாலை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story