ஈரோட்டில் உள்ள சத்தி ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


ஈரோட்டில் உள்ள சத்தி ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஈரோட்டில் உள்ள சத்தி ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் உள்ள சத்தி ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தடுப்பு சுவர்

ஈரோட்டில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது ரோட்டின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதன்படி ஈரோடு -சத்தி ரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் பிரிவு அருகே ரோட்டின் நடுவில் இடைவெளி இன்றி தடுப்பு சுவர் அமைக்க கம்பிகள் கட்டும் பணி நேற்று நடந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியல்

மேலும் அவர்கள் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்துள்ளனர். எனினும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று மதியம் ஒன்றுகூடி ஈரோடு -சத்தி ரோட்டின் இருபுறங்களிலும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் சென்ற வாகனங்களும், சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது. இதன் காரணமாக சத்தி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பாரதி தியேட்டர் பிரிவில் இடைவெளியின்றி சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இங்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டால் சத்தி ரோட்டில் இருந்து பாரதி தியேட்டர் பிரிவுக்கு செல்ல வேண்டும் என்றால் சுவஸ்திக் கார்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரை வந்து திரும்பி செல்ல வேண்டும். இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். எனவே பாரதி தியேட்டர் பிரிவு பகுதியில் சத்தி ரோட்டில் இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

அதற்கு போலீசார் 'இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ஈரோடு -சத்தி ரோட்டில் 20 நிமிடங்கள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Related Tags :
Next Story