திருவண்ணாமலை-தாம்பரம் இடையே திருக்கோவிலூர் வழியாக மீண்டும் ரெயிலை இயக்க வேண்டும்
திருவண்ணாமலை-தாம்பரம் இடையே திருக்கோவிலூர் வழியாக மீண்டும் ரெயிலை இயக்க வேண்டும் என்று மத்திய மத்திய மந்திரிக்கு அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் வக்கீல் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான எஸ்.ரஜினிகாந்த் ரெயில்வே துறை மந்திரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில், திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல ரெயில் வசதி இல்லாததால், இங்குள்ள வியாபாரிகள், பக்தர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பஸ் பயணத்தை நம்பியே உள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்டு வந்த ரெயில் கடந்த 2007-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் கடந்த 15 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை அளித்தும் நடவடிக்கை இல்லை. சென்னை கடற்கடையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு ரெயில் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலை திருவண்ணாமலைக்கு தினசரி இயக்க இந்திய ரெயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிந்துரை செய்தது. அதுவும் தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. நாடு முழுவதும் வந்தேபாரத், சூப்பர்பாஸ்ட், மெட்ரோ என பல்வேறு ரெயில் சேவைகள் இருக்கிற நிலையில், இங்கு ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த ரெயில்வே சேவையை மீண்டும் தர மறுப்பது இப்பகுதி மக்களின் உரிமையை தர மறுப்பதாகும். எனவே பயணிகள் நலன் கருதி திருவண்ணாமலை-தாம்பரம் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.