பத்ரகாளியம்மன் கோவில் உற்சவ விழா
கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி விடிய, விடிய தேர்ப்பவனி நடந்தது.
கொடைக்கானல் புதுக்காட்டு பகுதியில், பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18-ம் ஆண்டு உற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மின் தேர்ப்பவனி கோவிலில் இருந்து புறப்பட்டது. இதில், சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் அருள்பாலித்தார்.
புதுக்காடு, மேல்புதுக்காடு, கீழ் புதுக்காடு, அப்சர்வேட்டரி, செல்லபுரம், செம்மன்மேடு, பாம்பார்புரம், பேரிபால்ஸ் ரோடு வழியாக வந்த தேர்ப்பவனி நேற்று காலை மீண்டும் கோவிலை அடைந்தது. விடிய, விடிய நடந்த தேர்ப்பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நேற்று பிற்பகலில் சக்திகரகம், மாவிளக்கு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், அன்னதானம் மற்றும் முளைப்பாரி கரைத்தல் ஆகியவை இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. திருவிழாவின் நிறைவு நாளான அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி மறுபூஜை, பாலாபிஷேகம், பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.