பகவதி மலையம்மன் கோவில் தேரோட்டம்
தியாகதுருகத்தில் பகவதி மலையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளத்தில் பிரசித்தி பெற்ற பகவதி மலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பகவதி மலையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகள் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மின்கம்பத்தில் தேர் மோதல்
முன்னதாக புக்குளம் தெற்கு தெருவில் தேர் சென்றபோது, அங்கு சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் தேர் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி சந்திரா (வயது 61) என்பவரது காலில் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.