பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா
பெரியபனையூர் பகவதி அம்மன் கோவில் ைவகாசி திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பகவதி அம்மன் கோவில்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே பெரியபனையூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காளியம்மன், ஒண்டி கருப்பு ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழாவை நடத்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை நங்கவரம் ஒத்தக்கடை வாரியில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
திருவிழா தொடங்கியது
பின்னர் பகவதி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பகவதி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) கிடா வெட்டு பூஜை, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.