பொள்ளாச்சி ஆத்மநாதவனத்தில் பைரவர் ஜெயந்தி விழா


பொள்ளாச்சி ஆத்மநாதவனத்தில் பைரவர் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியை அடுத்த ஆத்மநாதவனத்தில் நடந்த பைரவர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த ஆத்மநாதவனத்தில் நடந்த பைரவர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆத்மநாதவனம்

பொள்ளாச்சியை அடுத்த அங்கலகுறிச்சி தாடகை மலை அடிவாரத்தில் ஆத்மநாதவனம் உள்ளது. இங்கு சமுக்தியாம்பிகை, சரபேஸ்வரர், காலசம்ஹார பைரவர் ஆகியோர் தனி, தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் ஜெயந்தி விழா கொணடாடப்படுவது வழக்கம்.

அதன்படி நடந்த ஜெயந்தி விழாவையொட்டி காலசம்கார பைரவருக்கு காலையில் பச்சை கற்பூரம், வில்வசாறு, கரும்புசாறு, திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

அஷ்டமுக அர்ச்சனை

மாலையில் மனோரஞ்சிதம், முல்லை, விருட்சி, தாமரை, முல்லை உள்ளிட்ட 8 வகையான மலர்களை கொண்டு சிறப்பு அஷ்டமுக அர்ச்சனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காலசம்கார பைரவர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மூலிகை தீப வழிபாடு நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், மூலிகை பிரசாரம் வழங்கப்பட்டது.

கோரிக்கை தேங்காய் வழிபாடு

மேலும் சமுக்தியாம்பிகை கோவிலில் பக்தர்கள் மட்டையுடன் கூடிய தேங்காயை சமர்பித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி வழிபட்டு தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். இதேபோன்று பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள் தேங்காயை மீண்டும் கோவிலில் திருப்பி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story