பாரத் பெயர் மாற்றம்: என்சிஇஆர்டி பரிந்துரை - வைகோ கண்டனம்


பாரத் பெயர் மாற்றம்: என்சிஇஆர்டி பரிந்துரை - வைகோ கண்டனம்
x

என்சிஇஆர்டி, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது சட்ட நெறிமுறைகளை மீறிய செயல் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து இக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக், "பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக உருவாக்கப்பட்ட என்சிஇஆர்டி, சமூக அறிவியல் பாடத்துக்கான உயர்நிலைக் குழுவை அமைத்தது. என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களில் மாற்றங்களைச் செய்ய 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் 1 (1) ஆவது பிரிவில் இந்தியாவின் பெயர் ஏற்கெனவே பாரத் என்று உள்ளது. பாரத் என்பது பழங்கால பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பழங்கால புத்தகங்களில் பாரத் என்ற பெயர் குறிப்பு உள்ளது.

கிழக்கு இந்திய கம்பெனி வந்த பின்பும், 1757-ம் ஆண்டு பிளாஸி போருக்குப் பின்பு தான் இந்தியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அதனால், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என உயர்நிலைக் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-ல், "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு 'பாரத்' என்பதை மட்டுமே அதிகாரபூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1-ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக 368-ஆவது பிரிவு, அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு சாதாரண பெரும்பான்மைத் திருத்தம் (Simple Majority Changes) அல்லது சிறப்புப் பெரும்பான்மை திருத்தம் (Special Majority Changes) மூலம் திருத்த அனுமதிக்கிறது.

அரசியலமைப்பின் பிரிவு 1-இல் மாற்றம் கொண்டுவருவது உட்பட அரசியலமைப்பின் மிகமுக்கிய மாற்றங்களுக்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும்பான்மை (66 விழுக்காடு) தேவை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இரு அவைகளிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்துவரும் ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரைப் பாரத் என்று நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி திருத்த புதிய சட்ட முன்வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்டத் திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது என்சிஇஆர்டி, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது அதன் அதிகார வரம்பை மீறியது மட்டுமல்ல, சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும். கடும் கண்டனத்திற்குரிய இந்தப் பரிந்துரையை ஏற்கக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story