கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' கவிஞர் வைரமுத்து கோரிக்கை
முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருதினை வழங்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது பாணியில் கவிதை மூலம் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஞ்சுகத்தாயின் ஒரே மகன் ஆகையால் நீ ஒன்றானவன்" என்று தொடங்கும் அந்த கவிதை உன்னை எண்ணங்களாலும் சிந்திக்கலாம் எண்களாலும் சிந்திக்கலாம்" என்று முடியும் வகையில் எழுதியுள்ளார். மேலும், கருணாநிதிக்கு உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் எனவும் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனது டுவிட்டரில் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் நினைவிடம், கலைஞர் சிலை, கோபாலபுரம் சி.ஐ.டி காலனி உள்ளிட்ட இடங்களில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், அனைத்து இடங்களிலும் பழைய நினைவுகளில் தன்னை பரவசத்தில் ஆழ்த்தியது எனவும் கூறியுள்ளார்.