திருவண்ணாமலையில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க பூமி பூஜை


திருவண்ணாமலையில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க பூமி பூஜை
x

திருவண்ணாமலையில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை நகரம் ஆன்மிக நகரம் மட்டுமின்றி சுற்றலா நகரமாகவும் உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள கோவில்கள், ஆசிரமங்களை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. மேலும் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் இடையூறுகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனால் திருவண்ணாமலை புதியதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

முதல்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைத்திட திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள வேளாண்மைத் துறையின் கீழ் உள்ள டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான 6.83 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். பின்னர் அந்த இடம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பூமி பூஜை

பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நகர மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story