பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி


பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 14 Oct 2023 7:00 PM GMT (Updated: 14 Oct 2023 7:01 PM GMT)

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும் என 3 பிரிவுகளில் போட்டி நடந்தது.

பரிசு

அதே போன்று மாணவிகளுக்கான போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் என 2 பிரிவுகளாக நடந்தது.

இந்த போட்டிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ.250-ம் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆய்வாளர் அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story