பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள்
அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் 14-ந் தேதி நடக்கிறது.
சைக்கிள் போட்டிகள்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு இப்போட்டிகள் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு கோலியனூர் கூட்டுசாலை அருகில் தொடங்கப்படும்.
இப்போட்டிகள் 3 பிரிவுகளாக பள்ளி மாணவ-மாணவிகள் இருபாலருக்கும் நடத்தப்படும். (13 வயதுக்குட்பட்டவர்- 1.1.2011, 15 வயதுக்குட்பட்டவர்- 1.1.2009, 17 வயதுக்குட்பட்டவர்- 1.1.2007 அன்றோ அதன் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்). முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்கள் வரை வெற்றி பெறுவோருக்கு ரூ.250 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வயது சான்றை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வர வேண்டும். தங்களது ஆதார் அட்டையின் நகல்(ஜெராக்ஸ்) சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் கலந்துகொள்வோர் சாதாரண சைக்கிள்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.
பரிசு- சான்றிதழ்
மேலும் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்னரே வருகைதந்து போட்டி நடைபெறும் இடங்களில் உரிய சான்றுகளை வழங்கி பதிவு எண் பெற்று தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்குகொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
எனவே மாணவ-மாணவிகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 14-ந் தேதியன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேற்கண்ட போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுதொடர்பாக இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (8754744060, 9566883394, 7401703485) தொடர்புகொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.