தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - 6 வயது சிறுவன் பலி


தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து  - 6 வயது சிறுவன் பலி
x

மணலி அருகே மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.

சென்னை

சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். தொழிற்சாலையில் தொடர்ந்து இரவு நேரங்களில் வேலை செய்து வந்ததால் பகல் நேரத்தில் பகுதிநேர வேலையாக உணவு டெலிவரி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்,தொழிற்சாலையில் இரவு பணியை முடித்துவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த அர்ஜுன் வழக்கம் போல உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது மூன்றாவது மகன் புகழ் குமரனையும் (வயது 6) உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

டெலிவரி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அர்ஜுன் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் சிறுவன் புகழ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அர்ஜூன் பலத்த காயங்களுடன் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story