திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் பந்தயம்


திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் பந்தயம்
x

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது.

திண்டுக்கல்

இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது.

மோட்டார் சைக்கிள் பந்தயம்

திண்டுக்கல் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி மோட்டார் சைக்கிள் பந்தயம், திண்டுக்கல் வெங்காய பேட்டை பகுதியில் இன்று நடந்தது. திண்டுக்கல் ஸ்போர்ட்ஸ் கிளப், மேற்கு மண்டல தி.மு.க. ஆகியவை சார்பில் நடந்த இந்த போட்டிக்கு திண்டுக்கல் மேற்கு மண்டலம் 40-வது வார்டு கவுன்சிலர் ஹசீனா பர்வீன் தலைமை தாங்கினார்.

மாநகராட்சி மேயர் இளமதி, நாட்டாண்மை காஜாமைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நாயுடு பேரவை மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. நிர்வாகி காஜாமைதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரூ.12 ஆயிரம் பரிசு

அதையடுத்து மோட்டார் சைக்கிள் பந்தய போட்டி தொடங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் 4 வயது முதல் 40 வயது வரை 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.12 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.8 ஆயிரம், 3-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.4 ஆயிரம், 4-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1000 மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

போட்டி தொடங்கியதும் மோட்டார் சைக்கிள்களில் வீரர்கள் சீறிப்பாய்ந்து சென்றனர். ஒவ்வொரு வளைவுகளையும் அதிவேகமாக அவர்கள் கடந்து செல்வதை பார்த்த பார்வையாளர்கள் பிரமித்தனர். போட்டியின் முடிவில் எக்ஸ்பர்ட் கிளாஸ் பிரிவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் என்பவருக்கு பரிசு கோப்பையும், ரூ.12 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதேபோல் மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story