சிறை கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்க உண்டியல்
சிவகங்கையில் சிறை கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்க உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.
குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு வரும் கைதிகளை நல்வழிப்படுத்தி சிறையில் இருந்து வெளியே அனுப்பும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அவர்களுக்கு படிக்கும், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி பொது அறிவு சமூக சிந்தனைகள் உள்ளிட்டவைகளுடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறைகளில் உள்ள நூலகங்களில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை படிக்க சிறைகைதிகளுக்கு தனி நேரம் ஒதுக்கி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
புத்தக திருவிழாவில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்குவதற்காக சிறைத்துறை சார்பில் புத்தக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலில் புத்தகத் திருவிழாவுக்கு வருபவர்கள் புத்தகங்களை வாங்கி அந்த உண்டியலில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முதல் 2 நாட்களிலேயே இந்த புத்தக உண்டியலில் மாணவ-மாணவிகள் ஏராளமான புத்தகங்களை வாங்கி வழங்கி வருகின்றனர். தாங்கள் மட்டும் புத்தகங்கள் வாங்கி பயன்பெறாமல் குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ள கைதிகள் மனம்மாறி அவர்களை நல்வழிக்கு திரும்ப வேண்டும் என்ற ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் புத்தகங்களை ஆர்வமுடன் புத்தக உண்டியலில் போடுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது.