பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து பயோகியாஸ் வசதி - கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் தகவல்


பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து பயோகியாஸ் வசதி - கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் தகவல்
x

பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து பயோகியாஸ் வசதி செய்து தரப்படும் என்று கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் மற்றும் புதுப்பட்டினம் பகுதியில் போலீஸ் பயிற்சி பள்ளி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் குழுவினர், புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத்தினர், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற தீவிர துப்புரவு பணி முகாம் நேற்று நடந்தது.

இதற்கு புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு தீவிர துப்புரவு பணி முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் இணைந்து கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பு வளாகம், புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை, புதுப்பட்டினம் பஜார் சாலை, பஸ் நிலையம், பக்கிங்காம் கால்வாய் சாலை போன்ற பகுதிகளில் சாலையில் சிதறி கிடந்த குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார்.

முன்னதாக துப்புரவு பணி முகாமை கொடியசைத்து தொடங்கி வைத்து அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் பேசியதாவது:-

கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் பொது இடங்களில் தூக்கி வீசப்படும் அழுகிய காய்கறிகளை சேகரித்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு பயோகியாஸ் பிரிவு தொடங்கப்பட்டு, அதன் மூலம் பயோ கியாஸ் உற்பத்தி செய்யப்பட்டு, கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பட்டிற்கு இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த துப்புரவு பணி முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, வாயலூர் ஒன்றிய கவுன்சிலர் தனபால், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அப்துல்உசேன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை, கல்பாக்கம் அணு மின் நிலைய நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், உணவு கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.


Next Story