பிளஸ்-1 பொதுத்தேர்வில் உயிரியல் வினாத்தாள் மிகவும் எளிமை


பிளஸ்-1 பொதுத்தேர்வில் உயிரியல் வினாத்தாள் மிகவும் எளிமை
x

பிளஸ்-1 பொதுத்தேர்வில் உயிரியல் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக ஆசிரியர் கருத்து தெரிவித்து உள்ளார்.

மதுரை

பிளஸ்-1 பொதுத்தேர்வில் உயிரியல் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக ஆசிரியர் கருத்து தெரிவித்து உள்ளார்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

மதுரை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில், உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த 20,173 மாணவ, மாணவிகளில் 561 பேர் மட்டும் தேர்வெழுத வரவில்லை.

இவர்களில் உயிரியல் பாடப்பிரிவில் 171 மாணவர்களும், வரலாறு பாடத்தில் 256 மாணவர்களும் அடங்குவர். மதுரை மத்திய சிறையில் விண்ணப்பித்திருந்த 14 பேரில் ஒரேயொருவர் மட்டும் தேர்வெழுதவில்லை. தனித்தேர்வர்களில் உயிரியல் மற்றும் வரலாறு பாடத்துக்கு மட்டும் விண்ணப்பித்திருந்த 294 பேரில் 50 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்த 50 மாணவர்களும் வரலாறு பாடத்துக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 288 மாணவர்களில் 238 பேர் மட்டும் தேர்வெழுதினர். உயிரியல் பாடப்பிரிவில் விண்ணப்பித்த ஒரேயொரு மாணவர் தேர்வெழுதினார்.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று உயிரியல் பாடத்துக்கு தேர்வு நடந்தது. தேர்வு வினாத்தாள் குறித்து விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வன் அற்புதராஜ் கூறியதாவது:-

எளிமையாக இருந்தது

உயிரியல் தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. இதில் விலங்கியல் பாடப்பிரிவு வினாக்கள் மட்டும் மாணவ, மாணவிகள் எதிர்பார்க்காத பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. தாவரவியல் பாடப்பிரிவில் சமீபத்தில் நடந்த செய்முறை பாடத்தேர்வு வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதினர். ஒரு மதிப்பெண் வினாக்களும் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. அதுவும், கடந்த காலாண்டு, அரையாண்டுத்தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளே வந்திருந்தன. இதனால் 35 மதிப்பெண்களில் 12 மதிப்பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு பெற்று விடலாம். யாரும் பெயிலாக முடியாது.

100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விலங்கியல் பகுதி வினாக்களால் தடைபட வாய்ப்புள்ளது. குழப்பமான கேள்விகள் இல்லாமல் அனைத்து கேள்விகளும் நேரடியாக கேட்கப்பட்டிருந்தன. புத்தக பின்பகுதி வினாக்களை விட்டு விட்டு நீட் தேர்வுக்காக புத்தகத்தின் உள் பகுதியில் அதிக கவனம் செலுத்தும் பள்ளி மாணவர்களுக்கு 40 சதவீத கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும். எனவே, புத்தகத்தின் பின்பகுதி வினாக்களில் எப்போதும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story