நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் நோய்
இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும்போது ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவதுடன், கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென இறந்துள்ளன. ஏராளமான வாத்துக்கள் இறந்ததால் கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பரிசோதனை முடிவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவைக்காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோழிப்பண்ணையாளர்கள் பீதி
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தினசரி சுமார் ஒரு கோடி முட்டைகள் மற்றும் அதிக அளவில் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவைக்காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.