சுட்டெரிக்கும் வெயிலால் பறவைகள் இன்றி வெறிச்சோடிய வேட்டங்குடி சரணாலயம்


சுட்டெரிக்கும் வெயிலால் பறவைகள் இன்றி வெறிச்சோடிய வேட்டங்குடி சரணாலயம்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணலாயம் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணலாயம் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பறவைகள் சரணாலயம்

திருப்பத்தூர்-மதுரை சாலையில் உள்ளது வேட்டங்குடிபட்படி பறவைகள் சரணாலயம். இங்கு சுமார் 40 எக்டேர் பரப்பளவில் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய் உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழையின் போது இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்புவது வழக்கம். அப்போது இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து கூடு கட்டி தனது இனத்தை பெருக்கி விட்டு திரும்பி செல்வது வழக்கம். அவ்வாறு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இங்கு வெளிநாட்டு பறவைகள் வரும்.

இவ்வாறு உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து செல்லும். அதன் பின்னர் கோடைக்காலங்களில் அந்த கண்மாயில் தண்ணீர் இருப்பை பொறுத்து அந்த பறவைகளின் இருப்பும் இருக்கும். இந்தாண்டு தற்போது கோடைக்காலம் தொடங்கி கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

சுற்றுலா பயணிகள்

பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்கிறது. அதேபோல சிவகங்கை மாவட்டத்திலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் தற்போது வெளிநாட்டு பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது விடுமுறையாக உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பறவைகள் சரணாலயத்திற்கும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் இங்கு வந்து பார்க்கும் போது பறவைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Next Story