தேர்த்தங்கல் சரணாலயத்தில் குஞ்சுகளுடன் தங்கிய பறவைகள்
சீசன் முடிந்து 2 மாதங்கள் முடிந்த நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் மரக்கிளைகளில் கூடுகட்டி கூழைக்கடா பறவைகள் வாழ்ந்து வருகின்றன.
சீசன் முடிந்து 2 மாதங்கள் முடிந்த நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் மரக்கிளைகளில் கூடுகட்டி கூழைக்கடா பறவைகள் வாழ்ந்து வருகின்றன.
சரணாலயம்
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் நயினார்கோவில் செல்லும் சாலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு டிசம்பர் மாதம் முதல் பறவைகள் வரத் தொடங்கும். இவ்வாறு இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் குஞ்சுகளுடன் ஏப்ரல் மாதம் திரும்பிச்செல்லும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த அதிக அளவு மழையினால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலையிலும் நீர் நிரம்பி காட்சி அளித்து வந்தது. நவம்பர் மாதத்தில் இருந்தே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கூழைக்கடா, செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நிற கூழைக்கடா, உள்ளான் குருவிகள், வாத்துக்கள் உள்ளிட்ட சுமார் 10,000-க்கும் அதிகமான பறவைகள் இந்த பறவைகள் சரணாலயத்தில் குவிந்திருந்தன.
ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் முடிந்து செங்கல் நாரை, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பெரும்பாலான பறவைகள் கடந்த 2 வாரத்திற்கு முன்பு குஞ்சுகளுடன் திரும்பி சென்றுவிட்டன. இந்த சரணாலயத்தின் நீர் நிலையில் இன்னும் தண்ணீர் இருந்து வருவதால் கூழைக்கடா பறவைகள் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பறவைகள் மரக்கிளைகளில் குஞ்சுகளுடன் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.
கூழைக்கடா
இவை தவிர நீர் காகம், வெள்ளை நிற கொக்குகள் ஒரு சில வாத்துகளும் இந்த பறவைகள் சரணாலயத்தில் தண்ணீரில் இரை தேடி வருகின்றன.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சீசன் முடிந்த உடனே ஏப்ரல் மாதமே அனைத்து பறவை களும் திரும்பி சென்றுவரும் நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் இந்த பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கடா பறவைகள் திரும்பி செல்லாமல் இன்னும் சரணாலயத்தில் மரக்கிளைகளில் கூடு கட்டி வாழ்ந்து வருவதை அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.