பீர்க்கன்காய் விலை திடீர் உயர்வு
தர்மபுரி மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் பீர்க்கன்காய் விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பீர்க்கன்காய் சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் பந்தல் அமைத்து பீர்க்கன்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதே போல் வீடுகளிலும் பீர்க்கங்காய் செடிகளை வளர்ப்பது வழக்கமாக உள்ளது. நார்சத்து அதிகம் கொண்ட பீர்க்கன்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம், தயமின் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.
இதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்புச்சத்து பீர்க்கன்காயில் அதிக அளவில் காணப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பீர்க்கன்காய் ரத்த சோகை பாதிப்பு உள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
விலை உயர்வு
தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ பீர்க்கன்காய் ரூ.32 முதல் ரூ.34 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று பீர்க்கன்காய் வரத்து குறைந்ததால் திடீர் விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ பீர்க்கன்காய் ரூ.42-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோபீர்க்கன்காய் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது. பீர்க்கன்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.