கோவையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவையில் நள்ளிரவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த கொண்டாடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவையில் நள்ளிரவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த கொண்டாடிய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பட்டா கத்தியால் கேக் வெட்டினர்
தமிழகத்தில் கத்தி, அரிவாள் மற்றும் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது, ரவுடிகளிடையே அதிகரித்து வருகிறது. அவர்களை போலீசார் பிடித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகரம் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் இடையர்வீதியில் ஒரு பேக்கரி அருகே பொதுஇடத்தில் சில பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் வாட்ஸ்-அப் மூலம் வெறைட்டிஹால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்தும் அங்கிருந்த சிலர் கத்தியை போட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவு என்.ஜி.பி. கார்டனைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 30), அவருடைய தம்பி அரவிந்த்குமார் (27), பி.என்.புதூரை சேர்ந்த தினேஷ்குமார் (23), காந்திபார்க் எம்.என்.ஜி. வீதியை சேர்ந்த பார்த்திபன் (26) என்பதும், இதில் அசோக்குமார் பிறந்தநாளை, அவர்கள் பொதுஇடத்தில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி கொண்டாடியதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 4 பேர் மீதும் கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடத்தில் பட்டா கத்தியால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பட்டா கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.