நாடாளுமன்ற தேர்தலுடன் தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும்
தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் காங்கயத்தில் பாதயாத்திரை சென்ற அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் காங்கயத்தில் பாதயாத்திரை சென்ற அண்ணாமலை கூறினார்.
என் மண், என் மக்கள் யாத்திரை
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊர் இங்குதான் உள்ளது. 3 போர்களில் ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றி பெற்று ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் தீரன் சின்னமலை கொல்லப்பட்டார் என்பது வரலாறு.
மத்தியில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளில் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பொருளாதாரத்தில் பாரதம் முன்னேற்றம் கண்டுள்ளது. 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இன்னும் மூன்றாண்டுகளில் 3-வது இடத்திற்கு முன்னேறும். சீனா, அமெரிக்காவை விட 2047-ம் ஆண்டு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக பாரதம் இருக்கும். இந்த இலக்கை எட்ட ஊழல் இல்லாத தலைவர் நாட்டை ஆள வேண்டும். இதை எடுத்துச் சொல்வதற்கு தான் இந்த யாத்திரை. அதற்கு 2024-ல் 3-வது முறையாக பாரதிய ஜனதாவை ஆட்சியில் நீங்கள் அமர வைக்க வேண்டும்.
தேங்காய்
தி.மு.க.வை பொறுத்தவரை 29 மாத ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல். எங்கும், எதிலும் ஊழல். திரும்பிய பக்கமெல்லாம் லஞ்சம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு அக்கட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 400 எம்.பி.க்களுடன் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அங்கு நமது தமிழக எம்.பி.க்கள் 39 பேர் இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசு அதை சோதனை அடிப்படையில் செய்வதாக ஏமாற்றியது.
மட்டையுடன் கூடிய தேங்காய் கிலோவுக்கு மத்திய அரசு ரூ.29.50-க்கு விலை நிர்ணயம் செய்தது. ஆனால் மாநில அரசு மட்டை உரித்த தேங்காயை மட்டும் கொள்முதல் செய்தது. மேலும் அதில் புரோக்கர் கமிஷன் கிடைக்க உதவி செய்தது.
சென்னிமலை பகுதியில் 10 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். அவர்களிடம் பள்ளி சீருடை மற்றும் நூல் கொள்முதல் செய்து கொள்கிறோம் என மாநில அரசு பொய் வாக்குறுதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளது. ஆனால் அதனையும் செயல்படுத்தவில்லை. தற்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என சொல்லி 60 சதவீதம் பேருக்கு அந்த தொகை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அமைச்சர்கள் நாளை யார் கோர்ட்டுக்கு போக வேண்டி உள்ளதோ? என்ற அச்சத்தில் உள்ளனர். பக்கத்து மாவட்ட டாஸ்மாக் அமைச்சர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியல் முன்னுரிமை கொடுத்தது பா.ஜனதா. தமிழக அமைச்சரவையில் தற்போது 34 அமைச்சர்களில் இரண்டு பெண் அமைச்சர்கள் தான் உள்ளனர். 2016 தேர்தலில் தி.மு.க. சார்பில் 8 பெண் வேட்பாளர்கள் தான் போட்டியிட்டனர். அது 2021-ல் 12 வேட்பாளராக மாறியது. இவர்கள் தான் பெண் உரிமை பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு பெண்ணுரிமை என்றால் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது மட்டுமே. சிவன்மலை கிரிவலப்பாதையில் உள்ள கிரானைட் குவாரிக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.