பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேருக்கு முன் ஜாமீன்


பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேருக்கு முன் ஜாமீன்
x

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேருக்கு முன் ஜாமீன் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார். அப்போது அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுகுறித்து பல்வேறு நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பெண்கள் உள்பட சிலர் கைதாகியுள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் மானகிரி கோகுல் அஜித், விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி இளங்கோவன் நேற்று பிறப்பித்தார்.

அதில், மனுதாரர்கள் சேலம் மாவட்ட கோர்ட்டில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story