திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வு முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வு வினாத்தாளில் நான்கு சாதிப்பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி இடம் பெற்றது. இந்த கேள்வி கடும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க. பட்டியல் அணி அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன், நகர தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.






