பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்
நெல்லையில் பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
பா.ஜனதா சார்பில் நெல்லை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் தலைமை தாங்கினார். நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ''வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் 350 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. மீண்டும் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி. தமிழகத்தில் 25 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும். இதற்காக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக உழைக்க வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவது போன்ற சாதனை திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கி கூறி வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் தயாசங்கர், நிர்வாகிகள் நீலமுரளி யாதவ், பொன் பாலகணபதி, ராஜ்கண்ணன், மகாராஜன், தமிழ்ச்செல்வன், வேல்ஆறுமுகம், முத்துப்பிரவேசம் உள்பட பலர் கலந்து உள்ளனர்.