பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்:
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்ததால் திருக்கோவிலூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அப்போது நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலிவரதன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பதிலுக்கு அ.தி.மு.க.வினரும் புகார் கொடுத்தனர். இந்த 2 புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருக்கோவிலூரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாநில தலைவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் வக்கீல் என்.ஆர்.கே. என்கிற என்.ராதாகிருஷ்ணன், பேச்சாளர் எரியீட்டி என்.ஏழுமலை, மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளி, சதாசிவம், நிர்வாகிகள் புவனேஸ்வரி, ராஜலட்சுமி, சரண்யா, பத்மாபழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.