தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும்:மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு
தமிழகத்தில் தி.மு.க.வை ஒழித்து பா.ஜக. ஆட்சி அமைக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.
மேட்டுப்பாளையம்,
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கினார். 3-ம் கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரில் கடந்த மாதம் 28-ந் தேதி பாதயாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெற்றதுதொடக்க விழாவில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்து அண்ணாமலையுடன் 3 கி.மீட்டர் தூரம் வரை நடந்து சென்றார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் உடன் சென்றார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பியூஸ் கோயல் பேசியதாவது;
அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோரின் கைகளில் தமிழகம் இனி பாதுகாப்பாக இருக்கப் போகிறது. உங்களில் ஒருவனாக இருக்கும் இவர்கள் திணிக்கப்பட்டவர்கள் அல்ல. வளமான முன்னேறிய பாரதத்தை நாம் இனி பார்க்க இருக்கிறோம்.தமிழகத்தின் நல்ல வளர்ச்சியை கொடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இரு கரத்தையும் தூக்கி ஆதரவு தெரிவியுங்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விலக்கப்பட வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.